புதன், 18 ஜனவரி, 2012

அணைக் கருப்பசாமி கோயில், பழனிசெட்டிபட்டி


தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் இருக்கும் முல்லை ஆற்றின் கட்டப்பட்டுள்ள சிறிய அணை ஒன்றின் அருகில் இருக்கிறது அணைக் கருப்பசாமி கோயில். ஓர் ஊரில் வாழும் மக்கள் அனைவரையும் காப்பது ஊர்த்தெய்வமே ஆகும். ஊர்ச் சாமி, ஊர்த் தேவதை, கிராம தேவதை, ஊர்க்காவல் தெய்வம் என்ற பெயர்களில் இவை குறிப்பிடப் படுகின்றன. அணைக் கருப்பசாமி பழனிசெட்டிபட்டியில் இருக்கும் அனைவராலும் காவல் தெய்வமாக வணங்கப்படுகிறார்.

கோயில் வரலாறு

தமிழகத்தில் இருக்கும் நீர்வளங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையின் நீர்நுண்ணளவுத் துறையால் நிர்வகிக்கப்பட்டு வரும் நிலையில் தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியில் முல்லை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை இந்த ஊரிலிருக்கும் பழனியப்பா பாசன பரிபாலன சபை எனும் நிர்வாகத்தினரால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த அணையின் பராமரிப்பு, நீர் பகிர்மானம் உட்பட இந்த அமைப்பே தனிப்பட்ட முறையில் செய்து வருகிறது. இதற்காக ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இவர்களுக்கு சிறப்பு செப்புப்பட்டயம் வாயிலாக உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த அணைக்கு அருகே இந்த நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்ட கோயில்தான் அணைக் கருப்பசாமி கோயில்.

காவல் தெய்வம்

வேண்டியதை உள்ளன்புடன் கேட்டால் தரும் காவல் தெய்வம் கருப்பசாமி.
வழிபாடு. பழநிசெட்டிபட்டி தோன்றிய காலத்திலிருந்து தேவாங்கர் எனும் தேவாங்க செட்டியார் இனத்தவர்களுக்கு பாத்தியப்பட்ட குலதெய்வக் கோவிலாக அமைத்து  வழிபட்டு வந்தனர். நூற்பாலைகள் போன்ற சில தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டதால்  காலப்போக்கில் மக்கள் குடியேற்றம்  இந்தப்பகுதியில் அதிகரித்தது. நாளடைவில் பொதுமக்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபாடு செய்யத் துவங்கினர். இன்று இந்த ஊரில் இருக்கும் அனைவராலும் அணைக் கருப்பசாமி காவல் தெய்வமாக வணங்கப்படுகிறார்.

வழிபாடு

பழனிசெட்டிபட்டியில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் முதலாவது முடி காணிக்கை செலுத்தும் முன்பாக  அணைக் கருப்பசாமி கோயிலில் சிறப்பு வழிபாடு செய்வது மரபு. உயிர்ப்பலி இன்றும் நடைமுறையில் உள்ளது.  கருப்பசாமிக்கு ஆடு அல்லது  கோழி பலியிடப்பட்டு  சமைத்து,   சாராயம் மற்றும்   சுருட்டு போன்றவற்றுடன்  சேர்த்து படையலாக வைத்து  வழிபாடுவது நடைமுறையில் உள்ளது. பின்னர் உறவினர் மற்றும் ஊர் சனங்களுக்கு   அந்தக் கோவிலுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் அசைவ உணவளிக்கும் வழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது.

1 கருத்து:

  1. இது முற்றிலும் உண்மையே மேலும் இக் கருப்பசாமியானவர் மிகவும்துடியான தெய்வம்.எனவே இக் கோயிலுக்குச் செல்கின்றவர்கள் மிகவும் பயபக்தியுடன் செல்லும்படி கேட்டுக்கொள்கின்றேன்

    பதிலளிநீக்கு