திங்கள், 9 ஜனவரி, 2012

நாட்டுப்புறவியல் : சிறு விளக்கம்


நாட்டுப்புறவியல் என்பது மக்களின் படைப்புகளைக் கொண்டு மக்களைப் படிக்கும் துறையாகும்  இந்தத் துறையின் நோக்கம் மக்களின் வாழ்க்கையை மேம்படுதுவது குறித்த வழி வகைகளைக் கண்டறிந்து  அவற்றை நடைமுறைப் படுத்துவதாகும். இதன் பயன்பாடு சமூகம், மதம், கலை, கலாச்சாரம், வரலாறு, மொழி, இலக்கியம் உள்ளிட்ட பல்துறை ஆராய்ச்சியில் இன்றியமையாததாகும்.

ஆங்கிலத்தில் நாட்டுப்புறவியல் என்ற சொற்றொடருக்கு நிகரான “Folklore” என்னும் பதத்தை ஜான் தாம்ஸ் (Willam John Thoms) என்ற மேல்நாட்டு மேதை  1846ல் கையாண்டார். ஆனாலும்  ஜெர்மனியைச் சேர்ந்த கிரீம் சகோதரர்கள்  (Grimm Brothers) இதற்கு முன்பாக ௧௮௧௨ ஆண்டிலேயே நாட்டுப்புறவியல் மற்றும் நாட்டுப்புற வழக்காறுகளான நாட்டுப்புறப் பாடல்கள், கதைகள், விளையாட்டுகள், வாக்குகள் (Sayings), பெயர்கள், மரபுத்தொடர்கள் என்பன ஜெர்மானியக் குடியானவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டு வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறாக, கிராமங்களில் உள்ள குடியானவர்களிடம் புழங்கிவரும் பழம் மரபுகளைப் பற்றிய ஆய்வைக் குறிப்பதற்கு ‘Folklore’ எனும் பதம் பயன்பாட்டிற்கு வந்தது.

Folk என்பதன் பொருள் என்ன? Folk  என்போரை கல்வியறிவற்றவர் ( Illiterate ) கிராமத்தில் வாழ்பவர் (Rural), தாழ்ந்த சமூக நிலையில் உள்ளவர் (Lower Stratum) என்று குறித்தனர்.  கல்விநிலை, வாழுமிடம், வாழும்நிலை போன்ற அடிப்படை அளவுகோல்கள் சுட்டிக் காட்டுவது காட்டுமிராண்டி நிலையிலுள்ள நாகரிக முதிர்ச்சியற்ற மக்களுக்கும் நாகரிகமடைந்துள்ள அல்லது கல்வியறிவு பெற்ற மக்களுக்கும் இடைப்பட்டவர்களைத்தான். இந்த விளக்கம் இன்றுங்கூட ஆய்வாளர்களிடம் செல்வாக்கு பெற்றுத் திகழ்கிறது.

எனினும் இந்த விளக்கம் திருப்தி அளிக்காததால் ஒரு புதிய விளக்கம் தோன்றியது. ‘Folk’ என்ற சொல் குறைந்த பட்சம் ஏதேனும் ஒரு பொதுவான பண்பைக் (காரணக்கூறு, இயல்பு, Factor) கொண்ட எந்த ஒரு குழுவையும் குறிப்பிடலாம். இணைக்கும் காரணக்கூறு எது என்பது பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. அது ஒரு பொதுவான தொழிலாக, மொழியாக, சமயமாக இருக்கலாம். ஆனால் எந்தவொரு காரணத்தையாவது அடிப்படைப் பண்பாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு குழு தனக்குச் சொந்தமானது என்று சொல்லிக் கொள்ளக்கூடிய சில மரபுகளைக் கொண்டிருப்பது முக்கியமாகும். கோட்பாட்டளவில் ஒரு குழு என்பது குறைந்த பட்சம் இருவரையாவது கொண்டிருக்க வேண்டும். ஆனால், பொதுவாகப் பெரும்பாலான குழுக்கள் பலரை உள்ளடக்கியிருக்கும். ஒரு குழுவின் உறுப்பினர் ஒருவர் தம் குழுவில் ஏனைய உறுப்பினர் எல்லோரையும் அறிந்திருக்க முடியாது. ஆனால், அக்குழுவினருக்குரிய மரபுக்கூறுகளை அவர் அறிந்திருப்பார். அதாவது அந்தக் குழுவினருள் அவரும் ஒருவர் என்பதை அக்குழுவினருக்கு உணர்த்தும் அடையாள மரபுகளை அவர் உணர்ந்திருப்பார்

அடுத்து படைப்புகளில் எதனை நாம் Lore என்று ஏற்றுக் கொள்ளலாம்? முதலில், எவற்றையெல்லாம் நாம் வழக்காறாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம் எனப் பார்ப்போம். எந்த ஒரு குழிவிலும் பல்வேறு  படித்தரங்களைக் காணலாம்: உதாரணம் ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர். இக்குழுவினர் பல்வேறு கலை இலக்கியங்களை ஆக்கம் செய்கிறார்கள். எனினும் இவை எல்லாவற்றையும் நாம் வழக்காறுகள் என்று சுட்டுவதில்லை. உதாரணமாக, சாதிக்குழுவைச் சேர்ந்த ஒரு படைப்பாளியின் கவிதையை நாம் வழக்காறு என்று ஏற்றுக் கொள்வதில்லை. அதே சமயம் அவர் முன்னோரான பாட்டன் அல்லது  பாட்டியிடமிருந்தோ அல்லது வேறு யாரிடமிருந்தோ காலங்காலமாக வழங்கி வரும் ஒரு பாடலைப் பாடினார் என்று வைத்துக் கொள்வோம். அல்லது  கதை,  பழக்கவழக்கங்கள் முதலியவற்றைக் கூறினார் என்று கொள்வோம். இது போன்ற  பாடல், கதை, பழமொழி, விடுகதை, நம்பிக்கை, சடங்குகள் போன்றவற்றை நாம் வழக்காறு என்கிறோம். நமக்குப் பாடிக் காட்டியவர் படிப்பாளியா இல்லையா என்பதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அவர் கிராமத்தில் வாழ்கிறாரா நகரத்தில் வாழ்கிறாரா என்றும் கருதிப் பார்க்கவில்லை. அவர் பாடிய பாடலின் தன்மைகளைக் கருதி நாம் வழக்காறா இல்லையா என்பதை நிர்ணயம் செய்கிறோம்.

மேலும் மக்களிடம் காணப்படும் கோலம், மரபுவழி மர மற்றும் சுதைச் சிற்பங்கள், மரபுவழியில் செய்யப்பட்டுவரும் கைத்தொழில்கள், பயிர்த் தொழில்கள், கூத்து, கரகம் போன்ற நிகழ்த்து கலைகள், மருத்துவம், வானிலையியல் போன்றவற்றையும் நாம் வழக்காறு என்று கொள்கிறோம். இவற்றுள் வாய்மொழியாகக் கேட்டு மட்டுமல்லாமல் கண் வழியாகப் பார்த்துக் கற்றுக் கொள்ளும் வழக்காறுகளும் உள்ளன.

 புராணங்கள், பழமரபுக் கதைகள், நாட்டுப்புறக் கதைகள், நகைச்சுவைத் துணுக்குகள், பழமொழிகள், விடுகதைகள், இன்னிசை உச்சாடனங்கள், நையாண்டிகள், சாபங்கள், சபதங்கள், வசவுகள், எதிர் உரைத்தல் (Retorts), இடித்துரைகள் (Taunts), பாராட்டுகள், நாப்புரட்டுகள், வரவேற்புரைகள், விடைபெறும் வாய்பாடுகள் போன்றவை ‘வழக்காறுகள்’ என்பதனுள் அடங்கும். மேலும், ஆடைகள், நடனம், நாடகம், கலை, நம்பிக்கை அல்லது மூடநம்பிக்கை, மருத்துவம், இசை, பாடல்கள், குறுமொழிகள் (Slang), உவமைகள் (Similies), உருவகங்கள், பட்டப்பெயர்கள், இடப்பெயர்கள் போன்றவையும் இதனுள் அடங்கும்.

நாட்டுப்புறவியல் என்பதற்கு இதுவரை நாம் கண்ணுற்ற பல விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டு நாட்டுப்புறவியலுக்குப் பின்வருமாறு பொருள் வரையறை வகுக்கலாம்:

1.      ஒரு மக்கட் குழுவினரிடையே வழங்கி வரும் அல்லது வழங்கி வந்த பாடல்கள், கதைகள், பழமரபுக்கதைகள், தொன்மங்கள், பழமொழிகள், புதிர்கள், நகைப்புகள் முதலான இலக்கியங்கள்

2.      கரகாட்டம், காவடியாட்டம், தெருக்கூத்து முதலான நிகழ்த்து கலைகள்

3.      ஓவியம், மரச் சிற்பம், சுதைச் சிற்பம் முதலான பொருட்கலைகள்
பாய்முடைதல், பொம்மை செய்தல் முதலான கைவினைப் பொருட்கள்

4.      வழிபாடு, நம்பிக்கைகள், மந்திரம், சடங்குகள் உள்ளிட்ட சமயப் பழக்க வழக்கங்கள்

5.      வானியல், வானிலையியல், நிலவியல், கடலியல், வேளாண்மை, கட்டடம் கட்டுதல், படகுகள் கட்டுதல், மருத்துவம் முதலான அறிவியல் தொழில் நுட்பம்.

போன்ற வழக்காறுகளை முறைப்படி சேகரித்து, வகைப்படுத்தி, அறிவியல் பூர்வமாக ஆராயும் ஆய்வுத்துறையை நாட்டுப்புறவியல் துறை எனலாம்.

டார்சனின் வகைப்பாடு

வடிவத்தின் அடிப்படையில் பல்வேறு வகைப்பாடுகள் நிலவிய போதிலும் ரிச்சர்டு எம். டார்சனின் (Richard M. Dorson) என்பாரின் வகைப்பாடு ஏற்றுக் கொள்ளத்  தக்கது. இவர் நாட்டுப்புற வழக்காறுகளை நான்கு வகைகளாகக் குறிப்பிடுகிறார்.

இவரது வகைப்பாடு பின்வருமாறு:

1. வாய்மொழி வழக்காறுகள்
1.1.   நாட்டுப்புறக்கதைகள் (Folk Narrative)
1.2.   கதைப்பாடல்கள் (Narrative Folk Poetry)
1.3.   நாட்டுப்புறக் காப்பியம் (Folk Epic)
1.4.   பழமொழிகள் (Proverbs)
1.5.   விடுகதைகள் (Riddles)
1.6.   aநாட்டுப்புறப் பேச்சு வழக்கு (Folk Speech)
2.       சமூகப் பழக்க வழக்கங்கள்
2.1.    விழாக்களும் பண்டிகைகளும்
2.2.    பொழுதுபோக்கும் விளையாட்டும்
2.3.    நாட்டுப்புற மருத்துவம்
2.4.    நாட்டுப்புறச் சமயம்
3.       பொருள்சார் பண்பாடு
3.1.    நாட்டுப்புறக் கைவினைப் பொருள்கள்
3.2.    நாட்டுப்புறக் கலைகள்
3.3.    நாட்டுப்புறக் கட்டடக் கலை
3.4.    நாட்டுப்புற ஆடைகள்
3.5.    நாட்டுப்புற உணவு முறைகள்
4.       நாட்டுப்புற நிகழ்த்து கலைகள்
4.1.    நாட்டுப்புற நாடகம்
4.2.    நாட்டுப்புற இசை
4.3.   நாட்டுப்புற நடனம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக