ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

மரகதலிங்கம்

மரகதலிங்கம் ஒரு வகை சிவலிங்கம்; மரகத்தால் செய்யப்பட்டிருக்கும். தமிழகத்தின் பல கோயில்களில் மரகதலிங்கங்கள் உள்ளன.

மரகதத்தின் பண்புகள்

மரகதம் (பெரில்) வகையைச் சேரந்த ஒரு கனிமம். வனேடியம் என்ற மூலகம் மரகதத்திற்கு பச்சை நிறம் தருகிறது. பச்சை நிறம் கொண்ட மரகதம் ஒளிரும் தன்மையுடையது. இதில் சிலிக்கன், அலுமினியம், மக்னீசியம் போன்ற இரசாயனக் கலவைகள் அடங்கியுள்ளன. இக்கற்கள் மிக மென்மையானவை; எளிதில் நொறுங்கும் தன்மை உடையவை. கண்ணாடிப் பாத்திரம் ஒன்றில் பாலை ஊற்றி அதில் மரகதத்தைப் போட்டால் பால் முழுவதும் பச்சை நிறமாகத் தோன்றும். நீர் நிறைந்த பாத்திரத்தில் போட்டால் நீர் முழுவதும் பச்சையாகத் தோன்றும். இப்படிப்பட்ட குணமுடைய கல் மிக விலை உயர்ந்த கல் ஆகும்.

நவரத்தினம்

மரகதக்கல் ஒன்பது நவரத்தினங்களுள் ஒன்றாகும். நவகிரகங்களில் புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதம் கருதப்படுகிறது. சில குறிப்பிட்ட நவரத்தினங்களுக்கு ஈர்ப்பு சக்தி உண்டு.

ஆன்மீகப் பண்புகள்

புதனுக்கு உரிய மரகதத்தை, லிங்க வடிவில் வழிபடுவது சிறந்தது என்று புராணங்கள் கூறுகின்றன. சிலைகளும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காக சில மன்னர்கள் மரகதக் கல்லில் லிங்கத்தை வடிவமைத்தனர். மன்னர்கள் இந்த வகை லிங்கங்கள் கோவிலில் வைத்து வழிபடுவதையே சிறப்பு என்று கருதினார்கள். மரகத லிங்கத்தை வணங்குவதன் மூலம் சகல விதமான தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வி, ஆரோக்கியம், அரசருக்கு நெருக்கமான பதவிகளில் அமரும் யோகத்தை மரகதலிங்கம் தரக்கூடிய வல்லமை படைத்தது என்கிறார்கள். வியாபாரத்தில் விருத்தி அம்சம் பெறவும் மரகதலிங்கத்தை வணங்கலாம்.



சப்த விடங்க தலங்கள்

ஏழு மரகதலிங்கங்கள் [[இந்திரன்]] மூலம் முசுகுந்த சோழச்சக்ரவர்த்திக்குக் கிடைத்தாக சொல்லப்படுகிறது. இந்த மரகதலிங்கங்களை இந்திரனே பூஜித்து வந்தாராம். முசுகுந்த சக்ரவர்த்தி 12 ஆம் நூற்றாண்டில் வேதாரண்யம், திருக்குவளை, திருக்கரவாசல், திருவாரூர், திருநள்ளாறு, நாகப்பட்டினம், திருவாயுமூர் ஆகிய ஏழு இடங்களில் உள்ள சிவன் கோவில்களுக்கு (சப்த விடங்க தலங்கள்) விலைமதிப்பில்லாத மரகதலிங்கங்களை மக்கள் வழிப்பாட்டிற்காக அமைத்துக் கொடுத்துள்ளார்.

சப்தவிடங்கத தியாகத் தலங்களில் மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால் அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது. இரவில் மரகதலிங்களின் மேல் சாற்றி காலையில் வழங்கப்படும் சந்தனமும் மிகச்சிறந்த மருத்துவ சக்தி வாய்ந்தது.

திருஇடைச்சுரம

செங்கல்பட்டிலிருந்து திருப்போரூர் செல்லும் பாதையில் சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. திருஇடைச்சுரம் என்ற திருத்தலம். தற்போது இந்த இடம் திருவடி சூலம் என்று அழைக்கப்படுகின்றது. இங்கு சிவலிங்கம் ஒரு சுயம்பு மரகதலிங்கம். சிவன் பச்சையாகக் காட்சியளிக்கின்றார். கற்பூர சோதி காட்டும்போது அந்த ஒளி லிங்கத்தின் மீது பட்டுப் பிரதிபலிக்கின்றது. கண்ணாடியைப் போன்று தெரிகிறது. புற்றுருவாக இருந்த சுவாமிக்கு அம்பிகை பசுவாக வந்து பால் பொழிந்த தலம் இதுவாகும்.

சிறுகரும்பூர் காமாட்சி சமேத திரிபுராந்தக ஈஸ்வரர் கோவில்

வேலூர் காவிரிப்பாக்கம் அருகே உள்ள சிறுகரும்பூரில் உள்ள சுந்தர காமாட்சி சமேத திரிபுராந்தக ஈஸ்வரர் கோயிலில் உள்ள மரகத லிங்கம் ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்தது. இப்போது (கடந்த ஜூலை மாதம்) இது திருடு போனது.

மரகதாசலேசுவரர் கோவில் திருஈங்கோய்மலை

திருச்சி அருகிலுள்ள மரகதாசலேசுவரர் கோவில் திருஈங்கோய்மலையில் சிவலிங்கம், பெயருக்கேற்ப மரகதக்கல் நல்ல பச்சை நிறத்தில் பளபளப்பாக இருக்கிறது.

நஞ்சுண்டேஸ்வரர் கோவில், நஞ்சன்கூடு மைசூர்

நஞ்சுண்டேஸ்வரர் கோவில், நஞ்சன்கூடு மைசூர் ஒரு சிவன் கோவில். இங்கு மாமன்னர் திப்பு சுல்தான் ஒரு மரகதலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்துள்ளார்.

மங்களேசுவரி சமேத மங்களநாத சுவாமி கோவில், உத்தரகோசமங்கை



இராமநாதபுரம் மாவட்டம் , திருஉத்தரகோசமங்கையில் உள்ளது மங்களேசுவரி சமேத மங்களநாத சுவாமி கோவில். இக் கோவில் வளாகத்திற்குள்ளே நடராஜருக்கென்று தனி சன்னதி உள்ளது. இங்கு உலகப் பகழ் பெற்ற பச்சை மரகதக்கல்லால் ஆன நடராசர் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். இக்கோவிலில் உள்ள மரகதலிங்கத்திற்கும், ஸ்படிகலிங்கத்துக்கும் தினசரி அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. மார்கழி மாதம், திருவாதிரைக்கு முதல் நாள் மட்டும் நடராசருக்கு அபிஷேகம் நடக்கிறது. ஆருத்ரா தரிசனத்தன்று பச்சை மரகதக்கல் நடராசருக்கு அபிஷேகம் நடப்பதால் அன்று ஒரு நாள் மட்டும் இவ்விரு லிங்கங்களுக்கும் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஒலி, ஒளி அதிர்வுகளைத் தாங்கும் சக்தி இல்லாத மென்மையான பண்புகள் கொண்ட பச்சை மரகதக்கல்லால் ஆன நடராசர் சிலையை சந்தனக் கலவையைப் பூசி பாதுகாத்து வருகின்றனர். திருவாதிரைக்கு முதல் நாள் மட்டும் பக்தர்களின் தரிசனத்திற்காக சந்தனப் பூச்சு கலைக்கப்படுகிறது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்


 பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் உள்ள போகர் சமாதியில் சித்தர் போகர் வழிபட்டதாகக் கருதப்படும் மரகதலிங்கம் உள்ளது.

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்


சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் சென்னைக்கு வட மேற்கே சென்னை - கல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 33-வது கிலோமீட்டரில் இடதுபக்கம் (மேற்கே) பிரியும் சாலையில் அமைந்துள்ளது. இங்குள்ள சிலைகளில் பாலசுப்பிரமணிய சுவாமி, ஆதிமூலர், நவக்கிரகம் தவிர மற்ற சிலைகள் பச்சைக்கல்லில் செய்யப்பட்டவை. கொடிமரத்துக்கு அருகில் முருகப்பெருமானின் மரகதப்பச்சை மயில் கொலுவாக வீற்று இருக்கிறது. கோவிலின் தென்மேற்கு மூலையில் மரகதகல்லில் சூரியனார் சிலை, நேர் எதிரில் கிழக்கே திருமுகம் கொண்ட மரகதவிநாயகர் (ராஜகணபதி) சிலை முருகப்பெருமானுக்கு தெற்கே அண்ணாமலையார் சிலை. இங்குள்ளது போன்ற பெரிய மரகதலிங்கம் வேறு எங்கும் இல்லை. இதுபோல் எல்லா விக்கிரகங்களும் மரதகப்பச்சை கல்லில் உள்ளது போல் வேறு எந்தக் கோவிலிலும் இல்லை.

மேற்கோள்கள்

1. மரகத லிங்கத்தின் சிறப்புகள் என்ன? http://tamil.webdunia.com/religion/astrology/articles/0908/07/1090807089_1.htm
2. திரு இடைச்சுரம் மரகதலிங்கம் http://www.natpu.in/?p=17725
மரகத லிங்கம் சென்னையில் பறிமுதல் http://www.nakkheeran.in/users/frmNews.aspx?PVN=19278
3. சிறுவாபுரி முருகன் ஆலயம் http://www.maalaimalar.com/2011/07/27092126/siruvapuri-murugan-temple.html

மூதேவி வழிபாடு

மூதேவி வழிபாடு என்பது இலக்குமியின் (ஸ்ரீதேவி) சகோதரியான மூதேவி (மூத்ததேவி) வழிபாட்டைக் குறிக்கும். இவ்வழிபாடு தமிழகத்தில் இருந்துள்ளது. சீதேவியின் மூத்த அக்காள் மூதேவி என்பதால் மூத்த தேவி என்ற சொற்பதம் மருவி மூதேவி என்று சுருங்கி விட்டது. சமசுகிருதத்தில் “ஜேஷ்டா தேவி” என்று அழைக்கப்படுகிறார்.

வரலாறு

சங்க இலக்கியங்களில் இவர் மாமுகடி (கரிய சேட்டை ஆகிய மூதேவி), தவ்வை, காக்கைக் கொடியோள் பழையோள் உட்படப் பதினான்கு (14) பெயர்களால் அழைக்கப்படுகிறாள். தெற்கின் பெரும் பகுதியைப் பல்லவர் ஆட்சி செய்த 8ம் நூற்றாண்டில் தமிழர்களின் தாய்த் தெய்வமாக மூதேவி இருந்துள்ளார். நந்திவர்ம பல்லவனுக்கு இவளே குலதெய்வம். பல்லவர் காலத்தைக் காட்டிலும் பிற்காலச் சோழர்காலத்தில் சேட்டை வழிபாடு சிறப்புற்றிருந்தமையைக் கல்வெட்டுகள் கூறும். சமணர்கள் மூதேவியை வழிபட்டுள்ளனர்.

ஏகாலி: வண்ணார் தெய்வம்

ஜேஷ்டா தேவிக்கு ஏகவேணி என்ற பெயர் உண்டு. ஏகவேணி என்றால் ஒற்றைச் சடையாள் என்று பொருள். வண்ணார்களுக்கு ஏகாலி என்று பெயர் உண்டு. ஏகாலி என்றால் ஒற்றைக்கால் என்று பொருள்.

தோற்றம்

மூதேவியின் கொடி காக்கை, வாகனம் கழுதை. ஆகும் மூதேவியை வெயிலுடனும், சீதேவியை மழையுடனும் தொடர்பு படுத்துகிறார்கள். மூதேவிக்கு மற்றொரு பெயர்தான் இந்த ஜேஷ்டாதேவி. வடமொழியில் ஜேஷ்டா என்றாள் மூத்தவள் என்று பொருள். பல கோயில்களின் உட்புறத்து வடமேற்கு மூலையில் மூதேவி விக்கிரங்கள் பிரதிட்டை செய்யப்பட்டன. இவளின் கைக்கருவி விளக்கமாறு. மூதேவி தெய்வத்தின் மகன் பெயர் குளிகன் மகள் பெயர் மாந்தி. மூதேவியின் சிலைக்கு வலப்புறத்தே மாந்தியின் சிலையும் இடப்புறத்தே குளிகனின் சிலையும் வைப்பது அப்போதைய மரபு. மேரு (மலை) வைத்து பூஜை செய்பவர்கள் ஒன்பது படிக்கட்டுகளை அமைப்பார்கள். இந்த மலைகளை நவாபரணம் என சொல்வதுண்டு. இதில் இரண்டாவது ஆபரணமாக ஜேஷ்டாதேவி விளங்குகிறாள்.

அனுக்கிரக தேவதை

மூதேவி வழிபாடு திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் வெகுவாகக் காணப்படுகிறது. திருக்கொண்டீச்வரம் பசுபதீஸ்வரர் கோவிலில் ஜேஷ்டா தேவி இடம் பெற்றுள்ளாள். இத்தலத்தில் இவள் ஒரு அனுக்கிரக தேவதை. திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஜேஷ்டாதேவிக்கு சிலை உண்டு. பல்லவன் இராச சிம்மன் எடுப்பித்த காஞ்சிக் கயிலாச நாதர் கோயிலிலும், கும்பகோணம் கும்பேசுவரர் கோயிலில் மங்களாம்பிகை சன்னிதிக்கு வடமேற்கேயும், வெடால் ஆண்டவர் திருக்கோயில் தென் புறத்திலும் சேஷ்டாதேவியின் திருவுருவம் நல்ல கட்டமைப்புடன் கூடிய இடத்தில் உள்ளது. திருச்சி மாவட்டம் உய்யக்கொண்டான் மலை "உஜ்ஜீவநாதர்' (மார்க்கண்டேயருக்கு மீண்டும் ஜீவன் அளித்ததால் சிவபெருமானுக்கு இப்பெயர்) கோவிலில் ஜேஷ்டாதேவியின் சிலை வித்தியாசமான வடிவமைப்பில் உள்ளது. பயணத்தின் போது எந்தவித விபத்தும் ஏற்படாமல் இருக்க ஜேஷ்ட தேவி வழிபாடு செய்யப்படுகிறது. இந்த தேவியை தரிசித்தால் விபத்துகளிலிருந்து நம்மை காப்பாற்றுவாள், எப்போதும் விழிப்புடன் இருக்கச் செய்வாள் என்பது நம்பிக்கை. சோம்பல் இல்லாத சுறுசுறுப்பான வாழ்வைத் தர வேண்டும் என இவளிடம் பக்தர்கள் வேண்டுவர். இவ்வாறு அனுக்கிரகம் அருளும் மூர்த்தியாக மூதேவி விளங்குகிறாள்.

குழந்தைப் பேறு தெய்வம்

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், வழூவூரிலுள்ள வீரட்டேஸ்வரர் கோயிலில் மேற்கு திருச்சுற்றிலுள்ள மேடையில் மூத்த தேவி உருவம் வைக்கப்பட்டுள்ளது. மூத்த தேவியானவள் தனது வலது பக்கத்தில் மகன் மாந்தனுடனும், இடது பக்கத்தில் மகள் மாந்தியுடனும் அமர்ந்த கோலத்தில் ஒரே பீடத்தில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. முற்காலத்தில் தாய்மார் எழுவர் வழிபாட்டில் (சப்தகன்னியர்) மூத்த தேவியை குழந்தைப் பேறு வேண்டி மக்கள் அனைவரும் வழிபட்டு வந்தார்கள். ஆனால் வளர்ச்சியடைந்த தற்போதைய கால கட்டத்தில் மக்கள் அனைவரும் பொருட்செல்வத்தை விரும்புவதால் இளையவளாகிய இலக்குமி தேவியையே பெரிதும் வழிபட்டு வருவது மரபாக உள்ளது. எனவே மக்கள் செல்வத்தை அளிக்கும் மூத்த தேவியை மூதேவி என பெயரிட்டு ஓரம் கட்டிவிட்டனர். அவ்வகையில் இத்தலத்திலும் அச்சிற்பத்தை தென்மேற்கு மூலையில் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது.

எதிர்மறை கருத்துக்கள

வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே – மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை

என்ற ஒளவையார் பாடலும்.

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.

என்ற திருவள்ளுவர் குறளும் மூதேவியின் பழமையைக் கூறுகின்றன. குறளின் பொருள் சோம்பேறியிடம் மூதேவி தங்குவாள்; சோம்பல் இல்லாதவனிடம் சீதேவி தங்குவாள் என்பதாகும்.

அழுக்கு, நாற்றம், துன்பம்,புலம்பல், அடிக்கடி கொட்டாவி விடுதல், தலைவிரித்து போடுதல், எப்போதும் அழுக்கு ஆடைகளை அணிதல், அலங்கோலமாக இருத்தல், எதிர்மறையான எண்ணங்கள், தீராத மனக்கஷ்டம் இவை எல்லாம் மூதேவியின் அறிகுறிகளாகும். இவற்றில் ஒன்று இருந்தாலே வரிசையாக எல்லாமே நம்மிடம் குடி புகுந்துவிடும்.

மூதேவி வழிபாடு தற்போது மிகவும் குறைந்துவிட்டது. மூதேவி என்ற நாட்டுப்புற சிறு தெய்வம் தமிழரிடையே வழங்கும் கதைகளிலும், பழமொழிகளிலும் தாழ்த்தப்பட்டு இழிசொல்லாக்கப்பட்டு விட்டதால் இவளுடைய முக்கியத்துவத்தைச் சரிவர உணர முடியாதிருக்கிறது.

மேற்கோள்கள்

1. மா. சந்திரமூர்த்தி தொகுத்த “தமிழ்நாட்டுச் சிவாலயங்கள்” எனும் நூலில் தரங்கம்பாடி காப்பாட்சியர் கோ. முத்துசாமி
2. சேட்டை வழிபாட்டுக் கோயில்கள் (http://www.tamilvu.org/courses/couindex.htm)
3. பழந்தமிழர்களின் மூதேவி வழிபாடு, (ஈழம் பிரஸ் [http://www.eelampress.com/2011/02/13898/)