ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

மூதேவி வழிபாடு

மூதேவி வழிபாடு என்பது இலக்குமியின் (ஸ்ரீதேவி) சகோதரியான மூதேவி (மூத்ததேவி) வழிபாட்டைக் குறிக்கும். இவ்வழிபாடு தமிழகத்தில் இருந்துள்ளது. சீதேவியின் மூத்த அக்காள் மூதேவி என்பதால் மூத்த தேவி என்ற சொற்பதம் மருவி மூதேவி என்று சுருங்கி விட்டது. சமசுகிருதத்தில் “ஜேஷ்டா தேவி” என்று அழைக்கப்படுகிறார்.

வரலாறு

சங்க இலக்கியங்களில் இவர் மாமுகடி (கரிய சேட்டை ஆகிய மூதேவி), தவ்வை, காக்கைக் கொடியோள் பழையோள் உட்படப் பதினான்கு (14) பெயர்களால் அழைக்கப்படுகிறாள். தெற்கின் பெரும் பகுதியைப் பல்லவர் ஆட்சி செய்த 8ம் நூற்றாண்டில் தமிழர்களின் தாய்த் தெய்வமாக மூதேவி இருந்துள்ளார். நந்திவர்ம பல்லவனுக்கு இவளே குலதெய்வம். பல்லவர் காலத்தைக் காட்டிலும் பிற்காலச் சோழர்காலத்தில் சேட்டை வழிபாடு சிறப்புற்றிருந்தமையைக் கல்வெட்டுகள் கூறும். சமணர்கள் மூதேவியை வழிபட்டுள்ளனர்.

ஏகாலி: வண்ணார் தெய்வம்

ஜேஷ்டா தேவிக்கு ஏகவேணி என்ற பெயர் உண்டு. ஏகவேணி என்றால் ஒற்றைச் சடையாள் என்று பொருள். வண்ணார்களுக்கு ஏகாலி என்று பெயர் உண்டு. ஏகாலி என்றால் ஒற்றைக்கால் என்று பொருள்.

தோற்றம்

மூதேவியின் கொடி காக்கை, வாகனம் கழுதை. ஆகும் மூதேவியை வெயிலுடனும், சீதேவியை மழையுடனும் தொடர்பு படுத்துகிறார்கள். மூதேவிக்கு மற்றொரு பெயர்தான் இந்த ஜேஷ்டாதேவி. வடமொழியில் ஜேஷ்டா என்றாள் மூத்தவள் என்று பொருள். பல கோயில்களின் உட்புறத்து வடமேற்கு மூலையில் மூதேவி விக்கிரங்கள் பிரதிட்டை செய்யப்பட்டன. இவளின் கைக்கருவி விளக்கமாறு. மூதேவி தெய்வத்தின் மகன் பெயர் குளிகன் மகள் பெயர் மாந்தி. மூதேவியின் சிலைக்கு வலப்புறத்தே மாந்தியின் சிலையும் இடப்புறத்தே குளிகனின் சிலையும் வைப்பது அப்போதைய மரபு. மேரு (மலை) வைத்து பூஜை செய்பவர்கள் ஒன்பது படிக்கட்டுகளை அமைப்பார்கள். இந்த மலைகளை நவாபரணம் என சொல்வதுண்டு. இதில் இரண்டாவது ஆபரணமாக ஜேஷ்டாதேவி விளங்குகிறாள்.

அனுக்கிரக தேவதை

மூதேவி வழிபாடு திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் வெகுவாகக் காணப்படுகிறது. திருக்கொண்டீச்வரம் பசுபதீஸ்வரர் கோவிலில் ஜேஷ்டா தேவி இடம் பெற்றுள்ளாள். இத்தலத்தில் இவள் ஒரு அனுக்கிரக தேவதை. திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஜேஷ்டாதேவிக்கு சிலை உண்டு. பல்லவன் இராச சிம்மன் எடுப்பித்த காஞ்சிக் கயிலாச நாதர் கோயிலிலும், கும்பகோணம் கும்பேசுவரர் கோயிலில் மங்களாம்பிகை சன்னிதிக்கு வடமேற்கேயும், வெடால் ஆண்டவர் திருக்கோயில் தென் புறத்திலும் சேஷ்டாதேவியின் திருவுருவம் நல்ல கட்டமைப்புடன் கூடிய இடத்தில் உள்ளது. திருச்சி மாவட்டம் உய்யக்கொண்டான் மலை "உஜ்ஜீவநாதர்' (மார்க்கண்டேயருக்கு மீண்டும் ஜீவன் அளித்ததால் சிவபெருமானுக்கு இப்பெயர்) கோவிலில் ஜேஷ்டாதேவியின் சிலை வித்தியாசமான வடிவமைப்பில் உள்ளது. பயணத்தின் போது எந்தவித விபத்தும் ஏற்படாமல் இருக்க ஜேஷ்ட தேவி வழிபாடு செய்யப்படுகிறது. இந்த தேவியை தரிசித்தால் விபத்துகளிலிருந்து நம்மை காப்பாற்றுவாள், எப்போதும் விழிப்புடன் இருக்கச் செய்வாள் என்பது நம்பிக்கை. சோம்பல் இல்லாத சுறுசுறுப்பான வாழ்வைத் தர வேண்டும் என இவளிடம் பக்தர்கள் வேண்டுவர். இவ்வாறு அனுக்கிரகம் அருளும் மூர்த்தியாக மூதேவி விளங்குகிறாள்.

குழந்தைப் பேறு தெய்வம்

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், வழூவூரிலுள்ள வீரட்டேஸ்வரர் கோயிலில் மேற்கு திருச்சுற்றிலுள்ள மேடையில் மூத்த தேவி உருவம் வைக்கப்பட்டுள்ளது. மூத்த தேவியானவள் தனது வலது பக்கத்தில் மகன் மாந்தனுடனும், இடது பக்கத்தில் மகள் மாந்தியுடனும் அமர்ந்த கோலத்தில் ஒரே பீடத்தில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. முற்காலத்தில் தாய்மார் எழுவர் வழிபாட்டில் (சப்தகன்னியர்) மூத்த தேவியை குழந்தைப் பேறு வேண்டி மக்கள் அனைவரும் வழிபட்டு வந்தார்கள். ஆனால் வளர்ச்சியடைந்த தற்போதைய கால கட்டத்தில் மக்கள் அனைவரும் பொருட்செல்வத்தை விரும்புவதால் இளையவளாகிய இலக்குமி தேவியையே பெரிதும் வழிபட்டு வருவது மரபாக உள்ளது. எனவே மக்கள் செல்வத்தை அளிக்கும் மூத்த தேவியை மூதேவி என பெயரிட்டு ஓரம் கட்டிவிட்டனர். அவ்வகையில் இத்தலத்திலும் அச்சிற்பத்தை தென்மேற்கு மூலையில் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது.

எதிர்மறை கருத்துக்கள

வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே – மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை

என்ற ஒளவையார் பாடலும்.

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.

என்ற திருவள்ளுவர் குறளும் மூதேவியின் பழமையைக் கூறுகின்றன. குறளின் பொருள் சோம்பேறியிடம் மூதேவி தங்குவாள்; சோம்பல் இல்லாதவனிடம் சீதேவி தங்குவாள் என்பதாகும்.

அழுக்கு, நாற்றம், துன்பம்,புலம்பல், அடிக்கடி கொட்டாவி விடுதல், தலைவிரித்து போடுதல், எப்போதும் அழுக்கு ஆடைகளை அணிதல், அலங்கோலமாக இருத்தல், எதிர்மறையான எண்ணங்கள், தீராத மனக்கஷ்டம் இவை எல்லாம் மூதேவியின் அறிகுறிகளாகும். இவற்றில் ஒன்று இருந்தாலே வரிசையாக எல்லாமே நம்மிடம் குடி புகுந்துவிடும்.

மூதேவி வழிபாடு தற்போது மிகவும் குறைந்துவிட்டது. மூதேவி என்ற நாட்டுப்புற சிறு தெய்வம் தமிழரிடையே வழங்கும் கதைகளிலும், பழமொழிகளிலும் தாழ்த்தப்பட்டு இழிசொல்லாக்கப்பட்டு விட்டதால் இவளுடைய முக்கியத்துவத்தைச் சரிவர உணர முடியாதிருக்கிறது.

மேற்கோள்கள்

1. மா. சந்திரமூர்த்தி தொகுத்த “தமிழ்நாட்டுச் சிவாலயங்கள்” எனும் நூலில் தரங்கம்பாடி காப்பாட்சியர் கோ. முத்துசாமி
2. சேட்டை வழிபாட்டுக் கோயில்கள் (http://www.tamilvu.org/courses/couindex.htm)
3. பழந்தமிழர்களின் மூதேவி வழிபாடு, (ஈழம் பிரஸ் [http://www.eelampress.com/2011/02/13898/)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக